செ.மு.புகாரி, சித்தார்கோட்டை
மார்க்சிஸ்ட் தலைவர் சங்கரய்யாவுக்கு "தகைசால் தமிழர்' விருதினை முதல்வர் அறிவித்ததையும், அதற்கானத் தொகை 10 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு சங்கரய்யா வழங்கியதையும் எப்படி பார்க்கிறீர்கள்?
"தகைசால் தமிழர்'’ என்ற விருது யாருக்கு வழங்கப்படவேண்டும் -அவர் எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும் என்பதை முதல் விருது அறிவிப்பிலேயே முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினும், மூத்த தோழர் சங்கரய்யாவும்.
லட்சுமிகாந்தம், வேலூர் (நாமக்கல்)
"எந்த மதத்தின் வழிபாட்டுத் தலத்திலும் காணிக்கை -நன் கொடை வசூலிக்கக்கூடாது' என ஒரு சட்டம் போட்டால் என்ன?
காணிக்கையோ நன்கொடையோ பக்தர்கள் தாமாக வழங்கும்போது சிக்கல் இல்லை. வலியுறுத்தும்போதுதான் கடவுளுக்கா, மனிதர்களுக்கா என்ற சந்தேகம் வருகிறது. அண்மைக்காலமாக நடைபாதைகளில் வழிபாட்டுத்தலங்கள் உருவாக்கப்பட்டு சாலைகளை ஆக்கிரமித்திருக்கின்றன. இது தொடர்பான ஒரு வழக்கு விசாரணை யின்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், தமிழ்ச்செல்வி ஆகியோர், "சாலைகளை ஆக்கிரமித்து கோவில்களைக் கட்டவேண்டும் என்று எந்த ஒரு மதக்கடவுளும் சொல்லவில்லை. ஆனால், மதத்தின் பெயரை எந்தெந்த வகையில் எல்லாம் தவறாகப் பயன்படுத்த முடியுமோ அந்த வகையில் எல்லாம் தவறாகப் பயன்படுத்துவது மனிதன் மட்டும்தான்''’என்று தெரிவித்தனர். சென்னையில் ஒரு பகுதியில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத்தலத்தை அரசு நிர்வாகத்தினர் அகற்றியபோது, அதனை எதிர்த்து சாமியாடினார்கள் பெண்கள். சட்டங்கள் விழித்திருந்தாலும் இதுபோன்ற உணர்வுகளில் மக்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
த.சிவாஜி மூக்கையாஸ், சென்னை-44
இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி தி.மு.க.வா? அ.தி.மு.கவா? நாம் தமிழர் கட்சியா?
"நாம் தமிழர்' கட்சியில் இருப்பவர்களில் அதிகம் பேர் இளைஞர்கள். "அ.தி.மு.க.'வில் "இளைஞர் பாசறை -இளம்பெண்கள் பாசறை' என்ற அமைப்புகளின் மூலம் இளைஞர்களுக் கான முக்கியத்துவம் தரப்பட்டுவந்த நிலையில்... தொய்வு ஏற்பட்டுள்ளது. "தி.மு.க.'வில் ரொம்ப காலத்திற்குப் பிறகு புதிதாக இளரத்தம் பாயத் தொடங்கி யுள்ளது. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் எழுச்சிமிக்க இளைஞர் அமைப்பைக் கொண்டிருப்பவை "கம்யூனிச இயக்கங்கள்'தான்.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72
ஒலிம்பிக் போட்டிகள் எப்படி?
அரங்கில் அமரும் பார்வையாளர்கள் கூட்டத்தின் அளவைக் கட்டுப்படுத்தி யிருக்கிறது கொரோனா. விளையாட்டு வீரர் -வீராங்கனைகள், நடுவர்கள் உள்ளிட்டோர் பெரும்பாலான நேரங்களில் முகக்கவசமும் கையுறையும் அணிய வேண் டியிருக்கிறது. எதிரெதிர் அணியினர் சகோதரத் துவத்துடன் கை கொடுப் பதும், தோளில் தட்டுவதும் தவிர்க்கப்படுகிறது. இவையெல்லாம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு கொரோனா காலம் தந்துள்ள புதுமைகள். ஆனாலும், வழக்கமான ஒலிம்பிக்கில் உள்ள உற்சாகம் குறையவில்லை. விளையாட்டுப் போட்டிகளில் அனைவரும் வேகம் காட்டுகின்றனர். பதக்கப் பட்டியலில் பெரிய -சின்ன நாடுகள் தங்களை இடம்பெறச் செய்கின்றன. வழக்கம்போல ஒரு தங்கமாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்தியாவுக்கு.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
கடலூரில் 10 ஆண்டுகளாக இருட்டு அறையில் 2 ஆயிரம் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள்?
10 ஆண்டுகளாக கடலூர் மட்டுமல்ல, 1000 கி.மீ. நீள கடற்கரையும், கிழக்கு -மேற்கு தொடர்ச்சி மலைகளும், காவிரி -வைகை ஆறுகளும், விளை நிலங்களும் கொண்ட தமிழ்நாடே நிர்வாக ரீதியில் இருட்டு அறையில்தான் இருந்திருக்கிறது. முந்தைய ஆட்சியின் திட்டங்களை முடக்கிப் போடுவதை அ.தி.முக. ஆட்சியும் அதன் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் ஒரு செயல்திட்டமாகக் கையாள, பின்னால் வந்தவர்களும் அதையே பின்பற்றினர். இனியாவது வெளிச்சம் பரவட்டும். அ.தி.முக. பாணியிலேயே செயல்படும் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி அமையட்டும்.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
பத்மினி, சரோஜாதேவி, தேவிகா, ஜெயலலிதா, கே.ஆர். விஜயா, மஞ்சுளா, சுஜாதா இவர்களில் சிவாஜி கணேசனுக்குப் பொருத்தமான ஜோடி யார்?
சிவாஜிக்குப் பொருத்தமில்லாத ஜோடி என்று யாருமில்லை. காரணம், சூரிய ஒளி குளத்து நீரில் பிரதிபலிப்பதுபோல, சிவாஜியுடன் நடிக்கும்போது அவரது நடிப்பாற்றல் அவருடன் ஜோடியாக நடிப்பவர்களுக்கும் ஒட்டிக் கொள்வது வழக்கம். "புதிய பறவை'யில் சரோஜாதேவி, "ஆண்டவன் கட்டளை'யில் தேவிகா, "எங்கிருந்தோ வந்தாள்' படத்தில் ஜெயலலிதா, "டாக்டர் சிவா' படத்தில் மஞ்சுளா என சொல்லிக்கொண்டே போகலாம். நடுத்தர வயதில் நாயகனாக சிவாஜி நடித்தபோது அவரது கதாபாத்திரத்திற்கு கச்சிதமான ஜோடியாக அமைந்தவர்கள் கே.ஆர்.விஜயாவும், சுஜாதாவும். இந்தப் பட்டியலில் இன்னும் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக, "பாசமலர்' படத்தில் தங்கையாக நடித்த சாவித்திரிதான் "நவராத்திரி', "இரத்தத் திலகம்', "திருவிளையாடல்' என பல படங்களில் சிவாஜியின் இணையராக -காதலியாக நடித்திருப்பார். "தியாகம்' படத்தில் லட்சுமியின் நடிப்பு சிவாஜியுடன் போட்டி போடும். ஆனாலும், நடித்த படங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் -படத்தில் அமைந்த கெமிஸ்ட்ரியின் அடிப்படையிலும் சிவாஜி-பத்மினி ஜோடிதான் டாப்.